படைப்பாற்றல் கல்வி

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னை சந்திக்க வந்தார். நலம் பாராட்டலுக்குப் பின் எங்கள் உரையாடல் கல்வியை நோக்கித் திரும்பியது. இன்றைய கல்விமுறையின் போக்குகள், வளர்ந்து வரும் உலகில் வெடித்துச் சிதறும் அறிவு ஜீவிப் போக்குப் பற்றியதாக உரையாடல் தொடர்ந்தது. உரையாடலில் நடுவே நண்பர் சில மாதங்களுக்கு முன் கண்ணுற்ற தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு பற்றி தனக்கு ஏற்பட்ட ஐயத்தினை வினவினார்.

மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அந்நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தது எட்டாம் வகுப்பு அறிவியல் பாடம் கற்பித்தல். ‘காற்று’ என்ற பாடப்பகுதியை ஆசிரியர் அறிமுகம் செய்தார்.

“வளிமண்டலம் என்பது புவியின் மேற்பரப்பில் தடித்தக் கூடுபோல் சூழ்ந்துள்ள காற்று ஆகும். காற்று பல வாயுக்கள் கலந்துள்ள ஒரு கலவை ஆகும். நாம் வளிமண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காற்றின் இயைபு மற்றும் அதன் வெப்பநிலை ஆகியவை வளிமண்டலத்தின் மேலே செல்லச் செல்ல உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். வளிமண்டலம் நான்கு முக்கிய அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: 1. டிரோபோசுபியர், 2. டிரேட்டோசுபியர், 3. மீசோசுபியர் மற்றும் 4. தெர்மோசுபியர் எனப்படும்.

“டிரோபோசுபியர் எனப்படும் அடுக்கில் நாம் வாழ்கிறோம். இது புவியில் மேற்பரப்பிலிருந்து 10 கி.மீ. உயரம் வரை விரிந்திருக்கும். இதுவே வளிமண்டலத்தின் அடர்த்தி மிகுந்த அடுக்காகும். இந்த அடுக்கில் உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலை குறைகிறது. ஒவ்வொரு கி.மீ. உயரத்திற்கும் வெப்பநிலையில் 6° செல்சியசு குறைவு ஏற்படுகிறது.

“டிரேட்டோசுபியர் என்பது வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கு ஆகும். இது புவியின் மேற்பரப்பிலிருந்து 10 கி.மீட்டருக்கும் - 50 கி.மீட்டருக்கும் இடைப்பட்ட உயரத்தில் உள்ளது. மூன்றாவது அடுக்காகிய மீசோசுபியர் 50 - 80 கி.மீட்டர் வரை விரிந்துள்ளது. இங்கே வெப்பநிலையானது கீழே உள்ள மற்ற அடுக்குகளைக் காட்டிலும் குறைவாகக் காணப்படுகிறது. தெர்மோசுபியர் 80 கி.மீட்டருக்கும் மேலே காணப்படுகிறது. இது ஒரு சூடான காற்றுப்பகுதியாகும்.”

ஆசிரியர் பாட அறிமுகத்தைத் தொடர்ந்து மாணவர்களை பாடப் புத்தகத்தில் உள்ள காற்று என்ற பாடப்பகுதியை வாசிக்குமாறு பணித்தார். ஆசிரியர் வழிக்காட்டுதலுடன் மாணவர்கள் பாடத்தினை வாசிக்க முற்பட்டனர். மாணவர்கள் தங்களுக்குப் புரியாத சொற்களை அடிக்கோடிடுமாறு ஆசிரியர் வழிகாட்டினார். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைப்படி மனவரைபடம் வரைய முற்பட்டனர். மனவரைபடம் வரைந்த பின்னர் மாணவர்கள் தங்கள் மன வரைபடத்தினை வகுப்பறையில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் தனது மனவரைபடத்தை மாணவர்களுக்குக் காட்டி விளக்கினார்.

ஆசிரியரின் மனவரைபடம் இவ்வாறாக அமைந்திருந்தது. ஒரு காளை மாட்டின் படம் வரையப்பட்டிருந்தது. அம்மாடு காற்று என்பதாக உருவகம் செய்யப்பட்டிருந்தது. வளிமண்டல அடுக்குகளாகக் கூறப்பட்ட டிரோபோசுபியர், டிரேட்டோசுபியர், மீசோசுபியர் மற்றும் தெர்மோசுபியர் என்பவை அந்த காளை மாட்டின் கால்களாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தன.

நண்பர் என்னிடம் வினவிய கேள்விகள் இவைதான். வளிமண்டலத்தின் நான்கு அடுக்குகளாகக் கூறப்படுபவை ‘மனவரைபடம்’ என ஆசிரியர் காட்டிய படத்தில் காற்றினைத் தாங்கும் தூண்களாக உருவகப்படுத்தப் பட்டிருந்ததே அது ஏன்? ‘காற்று’ என்ற பொருளை ஆசிரியர் தெளிவாகவே அறிமுகம் செய்தார். தொடர்ந்து மாணவர்கள் புத்தகத்தின் மூலம் வாசித்து வளிமண்டல அடுக்குகள் பற்றி புரிந்து கொண்டனர். பின்னர் இந்த மனவரைபடம் எதற்கு? தவறான அர்த்தமற்ற புரிதல்களை ஏற்படுத்தும் இத்தகைய படங்கள் மூலம் விளக்கங்கள் எதற்கு? நண்பரிடம் எழுந்த கேள்விகளைப் போன்றே நம்முள்ளும் இத்தகைய கேள்விகள் எழுகின்றன.


தொடக்க நிலை வகுப்புகளில் ‘செயல் வழிக் கற்றல்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதின் தொடர்ச்சியாக உயர் தொடக்க வகுப்புகளில் அதாவது 6,7,8 வகுப்புகளுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கற்றல் முறைதான் ‘படைப்பாற்றல் கல்வி’ என அழைக்கப்படும் செயல்வழிக் கற்றல் முறை(ALM). இப்புதிய கற்றல் - கற்பித்தல் அணுகுமுறையில் பாடம் பயிற்றுவிக்கப்பட்ட நிகழ்வுதான் மேலே கூறியது.

தொடக்க நிலை வகுப்புகளுக்கு செயல்வழிக் கற்றல்(ABL) முறையில் பயிற்றுவித்தல் நடைபெறும் நிலையில் உயர் தொடக்க வகுப்புகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட ஒரு புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. அத்தேவையினை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே ‘படைப்பாற்றல் கல்வி’ எனப்படும் இந்த ‘செயல்வழிக் கற்றல் முறை’(ALM).

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒரு குழு ரிசி பள்ளத்தாக்கு பள்ளி(The School)க்கு சென்றுவந்தது. உயர்தொடக்க வகுப்புகளுக்கு பயிற்றுவிக்க ஏதுவான முறையில் அமைந்திருந்த அப்பள்ளியின் கற்றல் முறையை தமிழக பள்ளிகளில் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தது. ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். 11 நாள்கள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மே 2007-ல் நடைபெற்ற பட்டறையில் 60 ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறை நிறைவடையும் நிலையில், ரிசி பள்ளத்தாக்கு பள்ளியில் செயல்படுத்தப்படும் கற்றல் முறைக்கு இணையானதொரு ‘செயல்வழிக் கற்றல் முறை(Active Learning Methodology)’ உருவாக்கப்பட்டது. ‘கற்பித்தல்’ என்ற வகுப்பறை செயல் கற்றல் என்ற நிலைக்கும் வகுப்பறை, கற்பிப்பவராகிய ஆசிரியரிடமிருந்து கற்போராகிய மாணவர்களிடம் கொண்டு செல்லப்படுவதாகவும் இம்முறை அமைந்திருக்கிறதாம்.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 60 ஆசிரியப் பயிற்றுநர்களும் முழு அளவில் செயல்பட்டு திட்டத்தின் வெற்றிக்காக உழைத்தனர். சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டதாம். அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறையை நடைமுறைப்படுத்தியது.

தமிழக கல்வி வரலாற்றிலேயே ஏன் இந்திய இல்லை உலகக் கல்வி வரலாற்றிலேயே உருப்பெற்ற 6 மாதங்களுக்குள்ளாக நடைமுறைக்கு வந்த கற்றல்-கற்பித்தல் முறை படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறையாக மட்டுமே இருக்க முடியும். அரசுக்கு கூடுதல் செலவினங்கள் எதையும் ஏற்படுத்தாத ஒரு முறையாக இப்புதிய கற்றல் முறை அமைந்துவிட்டதாம். அரசாணையில் இந்த வரிகள் இடம் பெற்றிருக்கிறது. கூடுதல் செலவினங்கள் ஏற்படாத நிலையில் எதைச் செயல்படுத்தினாலும் அரசுகள் கண்டுகொள்ளாது போலும்.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கனவுத் திட்டங்களில் ஒன்றான படைப்பாற்றல் கல்வியின் நோக்கங்களாக பின்வருவனவற்றைக் கூறுகின்றனர்.

· மாணவர்களை கற்றலில் நேரடியாக தானே ஈடுபடச் செய்தல்.


· மாணவர்களின் தனித்தன்மை, முழு ஈடுபாடு, மனப்பான்மைகள், திறமைகள், ஆர்வங்கள், உரிமைகள் அனைத்திற்கும் மதிப்பளித்தல்.

· உருவாக்கும் ஆற்றலை உரிமைப்படுத்துதல்.

· பாடத்திட்டத்தை முறையாகப் பயன்படுத்துதல்.

· வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் கற்றல் செயல்களை முடித்தல், மனவரைபடம் மற்றும் தொகுத்தலை பயன்படுத்துதல்.

· ஒரு சனநாயக வகுப்பறையை உருவாக்குதல்.

· படைப்பாற்றல் கல்வி முறையின் மதிப்பை உணர்தல்.

· முறையான மதிப்பீடு, திருப்புதல் மற்றும் குறைதீர் கற்பித்தலை பயன்படுத்துதல்.

· சிறப்பான செயல்பாடுகளைச் செய்தல்.

· பாடத் தொடர்புள்ள கேள்விகள், சரியான கேள்விகள் கேட்கப்பட்டதா என உறுதி செய்தல்.

· நற்பயன் விளைவிக்க உரியச் செயல்களைச் செய்தல்.


படைப்பாற்றல் கல்வியின் கூறுகள்:

படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை புரிந்து கொள்ளுதல், தொகுத்துரைத்தல், வலுவூட்டுதல் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டிருக்கிறது.

1. புரிந்து கொள்ளுதல்:

வாசித்தல் (Reading), மனவரைபடம்(Mindmap) என இரு படிநிலைகள் இதில் உள்ளடங்கியுள்ளது.

வாசித்தல் என்பது

1. தானே கற்றல்(Self Study)

2. இணைக் கற்றல்(Pair Study)

3. SQ4R முறை

4. படங்கள்(Diagram) வழிகற்றல்

என்ற வகைகளில் நடைபெறும்.


2. தொகுத்துரைத்தல்:

வாசித்துப் புரிந்து கொண்ட செய்தியை மனவரைபடமாக வரைந்துகொள்ளும் மாணவன், மனவரைபடத்தின் உதவியுடன் தான் படித்தவற்றை தொகுத்து எழுதுதல் வேண்டும்.

தொகுத்தல் என்பது பின்வரும் முறைகளில் அமையலாம்.

1. வார்த்தை வலை(Word web

2. அட்டவணை(Tables).

3. குறிப்புகள்(Hints).

4. வரிசைமுறையில் எழுதுதல்.

5. படங்கள் வரைதல்.

6. உண்மைத் தகவல்கள்.

7. காலங்கள்.


3. வலுவூட்டுதல்:

எழுதுதல், விவாதித்தல் என்ற நிலைகளில் வலுவூட்டுதல் நடைபெறும். எழுதுதல் என்பது பாட வினாக்களுக்கு விடை எழுதுதல் என்ற வகையிலும், விவாதித்தல் என்பது ஐயங்களை விவாதித்து தெளிவு பெறுதல் என்பதாகவும் அமைந்திருக்கும்.

படைப்பாற்றல் கல்வியின் ஆதாரக் கோட்பாடுகள்:

படைப்பாற்றல் கல்வி 5 ஆதாரக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

1. வாசித்தல்

2. கோட்பாடுகளைக் கண்டறிதல்

3. மனவரைபடம் வரைதல்

4. தொகுத்தல்

5. திருப்பிப் பார்த்தல்

என்ற வகையில் இது அமைந்துள்ளது.

படைப்பாற்றல் கல்வியை செயல்படுத்துதல்:

படைப்பாற்றல் கல்வி முறையில் நான்கு வகையான கற்றல் முறைகள் அமைந்துள்ளன. அவை

1. தானே கற்றல்

2. இணைக் கற்றல்

3. SQ4R முறை

4. படங்கள் வழி கற்றல்

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கற்றல் முறைகளும் 90 மணித்துளிகள் கால அளவில் நடைபெறும். ஒவ்வொரு கற்ற முறையும்

1. அறிமுகம்

2. வாசித்தல்

3. மனவரைபடம்

4. தொகுத்தல்

5. விவாதம்

6. வலுவூட்டுதல்

7. ஒப்படைப்புகள்

8. குறைதீர் கற்பித்தல்

9. எழுதுதல்

என்ற படிகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.

மனவரைபடம்:

படைப்பாற்றல் கல்வியில் பெரிதும் வலியுறுத்தப்படுவது மனவரைபடம் என்பதாகும். படைப்பாற்றல் கல்வி முறை மனவரைபடம் என்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. மாணவர்களின் மனத்தின் பதிவுகள் இவ்வரைபடத்தில் வெளிப்படுகிறதாம். பாடப்புத்தகத்தை வாசித்துப் புரிந்து கொண்ட மாணவன் தனது புரிதலை மனதில் நிறுத்த அதனை மனவரைபடமாக வரைய வேண்டும். மனவரைபடத்தை நினைவு கூறும் நிலையில் மாணவன் தேர்வுகளில் சிறப்பாக பதிலளிக்க முடியுமாம். மனவரைபடமின்றி கற்றல் என்பது இல்லை என்ற நிலை விரைவில் தமிழகத்தில் உருவாகும்.

மனவரைபடம் என்றால் என்ன?

· புதிய எண்ணங்களை, சிந்தனைகளை ஒருங்கமைக்கும் படைப்பாற்றலே மனவரைபடம்.

· தன் கற்பனைத் திறனுக்கேற்ப மையக் கருத்தையும் துணைக் கருத்துகளையும் வரைபடமாக விளக்கும் தெளிவான மிகச் சிறந்த கற்றல் நுணுக்கம்.

· முக்கிய கூற்றுகளையும் அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் படித்தல், அதனுடன் தொடர்புடைய கருத்துகளையும் சிந்தனைகளையும் நினைவாற்றலுக்கேற்ப வரைபடமாக விளக்கும் கற்றல் விளைவு.

· மனவரைபடம் புரிதலின் விளக்க அமைப்பு.

· மனவரைபடம் ஒரு விதமான வகைப்படுத்துதல் அல்லது வரிசைப்படுத்தல்.

· அறிவுத் திறனுக்கேற்ற சொற்களை இணைக்கும் ஒரு வலைப்பின்னலே மனவரைபடம்.

· மனவரைபடம் சொற்பொருள்களின் அமைப்பு அல்லது அறிவு சேகரிப்பு.

· தன் நினைவில் நின்ற கூற்றுகளை கருத்துகளை வெளிப்படுத்தும் பார்வையான மரம் போன்ற அமைப்பு.

· நினைவாற்றலை பிரதிபலிக்கும் மரம் போன்ற அமைப்பு.

· செறிவான கூரிய கருத்துகளை ஒன்றுக்குள் ஒன்று இணைக்கும் பாலம்.

· மனித மூளையின் ஒருங்கிணைந்த முழு செயல்பாட்டின் விளைவே மனவரைபடம்.

மனவரைபடம் எவ்விதத்தில் நன்மை பயக்கும்?

· மனித மூளையின் ஒருங்கிணைந்த முழு செயல்பாடாக சோர்வின்றி, சுறுசுறுப்புடன் மாணவன் கற்றலில் ஈடுபடச் செய்யும்.

· அதிகப்படியான கருத்துகளை குறைந்த நேரத்தில் ஒருங்கமைக்க உதவும்.

· குறைந்த முயற்சியில் ஒருங்கமைக்கவும் கற்கவும் உதவும்.

· சிந்தனைகளைத் தெளிவுபடுத்தும்.

· படைப்பாற்றலைத் தூண்டும்.

· நினைவாற்றலை ஒருங்கமைக்கும் அடித்தளமாக அமையும்.

· கற்பனைத் திறனை அதிகரிக்கும்.

· மனதில் தோன்றும் கேள்விகளையும், கருத்துகளையும் பாடத்துடன் தொடர்புபடுத்த ஏதுவாகும்.

· மனவரைபடம் வரைதலின் போது முழு ஈடுபாடு வருகிறது.

· மனவரைபடம் வரைதலின் போது மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.

· மனவரைபடம் படிக்கவும், மனதில் நிறுத்திக் கொள்வதற்கும் ஏதுவாகிறது.

· முதல் மனவரைபடம் ஆரம்பநிலையாக, வளரா நிலையாக இருப்பினும் பிறகு வரையப்போகும் மனவரை படத்திற்கு அடித்தளமாக அமைகிறது.


டைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கற்றுக் கொண்டதை நினைவில் நிறுத்திக் கொள்ள மன வரைபடம் வரைதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் தொடக்கப் பள்ளி மாணவன் இத்தகைய விதிகளுக்கும் வரையறைகளுக்கும் கட்டுப்பட்டுக் கல்வி கற்றல் என்பது இயலுமா?

ஒருவன் தனது சூழ்நிலைகளை(சுற்றியுள்ள உலகத்தை) உற்று கவனிக்கும்போது, புரிந்துகொள்ளும்போது, மனச் செயலாக உள்வாங்கிக் கொள்ளும்போது மனப்படங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு தனிநபரும் அவரது தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் கூடிய தனி மாதிரியை உருவாக்கிக் கொள்கிறார். அவரைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய அறிவை இப்படித்தான் ஒவ்வொருவரும் பெறுகின்றனர். இதற்கு மாணவர்களும் விதிவிலக்கல்ல.

புரூனர் என்பவரின் கூற்றுப்படி அறிவாற்றல் வளர்ச்சி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. ஒரு குழந்தை ‘ஆப்பிள் பழம்’ என்பதை தொட்டுப் பார்த்து, கையில் எடுத்துப் பார்த்து, சுவைத்துப் பார்த்து அதனை அறிந்து கொள்கிறது. இது ‘செயல்பாட்டு நிலை’ பின்பு அக்குழந்தை வளரும்போது ஆப்பிள் பழத்தின் படத்தையோ, மாதிரியையோ ‘போலப் பார்த்தல்’ மூலம் உணர்வான். இது உருவ நிலை. இன்னும் வளர வளர ஆப்பிள் என்ற வார்த்தையொன்றே அவனுக்குப் பழத்தை நினைவுபடுத்தும். இது குறீயீட்டு நிலை.

படைப்பாற்றல் கல்வி எனப்படும் இப்புதிய கல்விமுறையில் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு இடமில்லை. உண்மையான படைப்பாற்றல் என்பது தொட்டு, சுவைத்து, உணர்ந்து கொள்வதன் மூலம் தானே நிகழமுடியும்?

படைப்பாற்றல் கல்வி முறை அடிப்படையிலேயே தவறாக உருவாக்கப்பட்டிருப்பது என்பது உறுதி. எப்பருவ வயது மாணவர்களுக்கு ஏற்றதான முறை என்பதில் இதை உருவாக்கியவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவு. படைப்பாற்றலின் கூறுகளாக கல்வியாளர்கள் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றனர். அவை:

1. மொழிச் சரளம்

2. நெகிழும் தன்மை

3. தன்முதன்மை / தற்பண்பு

4. விரிவாக்கம்.


ஒவ்வொரு குழந்தையும் படைப்பாற்றல் நடத்தையை ஓரளவிற்குக் கொண்டிருக்கும். சில குழந்தைகள் சில குறிப்பிட்ட துறையில்(சான்றாக அறிவியல், கலை படைப்பு) சிறந்து விளங்கலாம். படைப்பாற்றல் சிந்தை உடைய மாணவர்களிடம் பின்வரும் இயல்புகள் காணப்படும்.

· தன் முதன்மைச் சிந்தனை வெளிப்பாடு, செயல் மற்றும் நடத்தை.

· பல நேரங்களில் நெருக்கடியான கேள்விகளைக் கேட்பது.

· தனது கருத்தை ஆணித்தரமாக விவாதிப்பது.

· தீர்வுகளுக்கு மாற்றுத் தீர்வுகளைச் சொல்வது.

· சுயகருத்து உயரிய நிலையில் அடைவைக் காட்டுதலில் மிகவும் ஆர்வமுடன் ஈடுபடுதல்.

· குழப்பங்களைத் தெளிவின்மையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

· ஆர்வமுடைமை, கட்டுப்பாடற்ற சுயதீர்ப்பு / தன்னாட்சியை வெளிப்படுத்துதல்.

இப்பண்புகளை வளர்த்தெடுக்கும் வழிமுறைகள் எதுவும் செயல்வழிக் கற்றல் முறையில் இருப்பதாகத் தெரியவில்லை.

சிந்தனை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி குறித்து பியோகே, குழந்தை மனிதனாக வளர்ந்து முன்னேறும் பருவத்தோடு ஒப்பிட்டுத் தம் கருத்துகளை நமக்கு கோடிட்டுக் காட்டுகிறார். வாழ்வின் பச்சிளம் பருவத்தில்(0 - 2 ஆண்டுகள்) குழந்தை தொடுதல் மூலமும் புலனுணர்தல் மூலமுமே கற்கிறது. சின்னக் குழந்தைகள் கையில் தங்கள் கவனத்தை ஈர்க்கும் பொருள்களைப் பிடித்துக் கொண்டும் வாயில் போட்டுக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம். இந்த நிலையை பியோகே ‘புலனியக்க நிலை’ என்று கூறுகிறார். குழந்தை வளர வளர(2 - 7 ஆண்டுகள்) ஆராயும் திறன் வளர்கிறது. இந்த நிலையை ‘செயலுக்கு முந்தைய நிலை’ என்று கூறுகிறார். மூன்றாவது நிலையான ‘புலனிடான செயல் நிலை’யில்(7 - 11 ஆண்டுகள்) குழந்தை தேவையானதைக் கற்றுக் கொண்டதன் விளைவாகத் தான் பார்க்கும் பொருள்களில் மாற்றங்களைக் காண விழைகிறது. அவனது கற்பனைத் திறன் அவனது அடுத்த நிலையான ‘முறையான செயல் நிலை’க்கு(11 ஆண்டுகள் முதல்) இழுத்துச் செல்கிறது. இந்த நிலையில் அவன் தர்க்க முறையிலான கருதுகோளை அமைத்து இடையுறவை ஏற்படுத்தவும் முடிவுகளைப் பெறவும் முயற்சிக்கலாம்.

உயர் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பியோகேயின் கூற்றுப்படி ’புலனீடான செயல் நிலை’யைச் சார்ந்த குழந்தைகள். புதியனவற்றை அறிந்து கொள்ளத் துடிக்கும் பருவம் இது. தான் பார்க்கின்ற பொருள்களில், தான் கற்றுக் கொண்டிருப்பதை செயல் படுத்திப் பார்க்க விளைகின்ற பருவம் இது. இத்தகைய தன்மைகளைக் கருத்தில் கொண்டுதான் பள்ளி கலைத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மாணவர்களின் மாற்றங்களைக் காண விரும்பும் ஆர்வத்தினைத் தூண்டுவதாக பாடங்கள் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் புதிய செய்திகளை/கருத்துகளை அறிமுகம் செய்வதாகவே பாடங்கள் இருக்கும். மாணவர்களின் சிந்தனைத் திறன் வளர்ச்சியடைய உதவுவதாக பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் இப்பாடங்களை முழுமையாக அறிந்து கொள்ளவேண்டுமாயின் ஆசிரியரின் விரிவான-எளிமையான விளக்கமும் வழிகாட்டுதலும் இன்றியமையாதது ஆகும். தற்போது நடைமுறையில் உள்ள படைப்பாற்றல் கல்வி முறையில் இதற்கான சாத்தியங்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருப்பினும் நடைமுறையில் பயன் விளைப்பதாக இல்லை.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள படைப்பாற்றல் கல்வி முறை பற்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பின்வரும் ஐயங்களை எழுப்புகிறார்கள்.

· படைப்பாற்றல் கல்வி என்பது முறையான கற்றல் – கற்பித்தல் முறைக்கு சிறந்த மாற்றாக இருக்க முடியுமா?

· 90 மணித்துளிகள் பாடவேளை என்பது நடைமுறைச் சாத்தியம் தானா? மாணவர்கள் ஒருமுகப்பட்டு அத்துணை நேரம் வகுப்பறையில் செயல்படுதல் இயலுமா?

· மனைவரைபடம் என்ற ஒன்று மாணவர்களின் கற்பனை ஆற்றல் வளர்க்குமேயன்றி சிந்தனை ஆற்றலை வளர்க்குமா?

· தற்போதைய கல்வி முறையில் வளர்த்தெடுக்கப்படும் ஒரே ஒரு திறனான மனப்பாட ஆற்றலையும் மனவரைபடம் அழித்துவிடாதா?

· அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் படைப்பாற்றல் கல்விமுறையை முன்னோட்டமாக செயல்படுத்திட அரசால் வழங்கப்பட்ட ஆணையைப் புறந்தள்ளி அனைத்து பாடங்களும் படைப்பாற்றல் கல்வி முறையில் நடத்தப்போவது எப்படி? அரசையும் தாண்டிய அதிகாரம் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு இருக்கிறதா?

· அறிவியல் பாடம் கற்பித்தலில் படங்கள், மாதிரிகள் மூலம் கற்பித்தல் நடைபெறும் நிலையில் மனைவரைபடம் எதற்கு? படங்களே சிறந்த மனவரைபடங்கள் தானே?

· சமூக அறிவியல் பாடத்தில் பயன்படுத்தப்படும் காலக்கோடுகள், நிலப்படங்கள், போன்றவை மனைவரைபடங்கள் தானே? இவற்றிற்கு இன்னொரு மனவரைபடம் தேவையா?

· மாணவர் தான் படித்தவற்றை மனவரைபடமாக வரைந்து, பின்னர் அதனைத் தொகுத்து, மீண்டும் வினாக்களுக்கு விடையாக குறிப்பேட்டில் எழுதுதல் என்பது அளவுக்கு அதிகமான சுமையாக இராதா?

· பாட அறிமுகம், விளக்கம் இவற்றிற்கு குறைவான கால அளவே(10-20 மணித்துளிகள்) ஆசிரியருக்கு வழங்கப்படுவதால் பாடம் தொடர்புடைய பிற கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொள்ள இயலாத நிலை இருப்பது இம்முறைக்கு பின்னடைவுதானே?

இறுதியாக, அரை வேக்கட்டுத்தனமான இத்தகைய புதிய முயற்சிகளினால் எவ்வித பயனும் விளைந்து விடப் போவதில்லை. இப்புதிய கற்றல் கற்பித்தல் முறையினால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து விடும். இம்முயற்சிகள் அனைத்தும் ஆங்கில வழிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. கல்வி என்பது கடைச் சரக்கு தானோ
?

(இக்கட்டுரை மேய் 2009 தமிழினி இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: