பிணக்கு

பொழுது புலர்ந்தது.
எதிரும் புதிருமாக
நானும் அவனும்.
முகம் நோக்க
முனைப்பு இல்லை.
குறிப்பிட்டுச் சொல்ல
காரணம் இல்லை.
பேசவில்லை இருவரும்,
ஏனென்று தெரியவில்லை.
நிமிடங்கள் நகர்ந்தன.
காலை இறுக்கம்
மதியம் கடந்து,
மாலையிலும் தொடரும்
சூட்சுமம் விளங்கவில்லை.
ஏனிந்த பிணக்கு?

நாட்கள் சென்றன,
மாதங்கள் ஆகின,
பகைமை மாறவில்லை.
எனது செயல்கள்
அவனது பார்வையில்
குற்றம் குற்றம்.
தனியொரு வட்டம்
என்னைச் சுற்றிலும்.
அவனும் அதுபோல்
தனியொரு கூட்டமாய்
ஏட்டிக்கு போட்டி.
அவனது நடத்தைகள்
மற்றவர் உள்ளத்தில்
வியப்பை விதைத்தது.
ஏனிந்த பிணக்கு?

எனது இயக்கம்
எனது அசைவுகள்
எரிச்சல் தந்தன
அவனது உள்ளத்தில்.
கருத்த முகத்துடன்
கனத்த இதயத்துடன்
கலங்கிய உள்ளத்துடன்
தனித்தனாய் அவன்.
வார்த்தைகள் நெறிபிறழ
அவன் நடத்தை
விமர்சனம் ஆனது.
விரிசல் விசாலமாயிற்று
விளைவு விபரீதமாயிற்று.
ஏனிந்த பிணக்கு?

வருத்தமும் வேதனையும்
இருவர் மனதிலும்
புண்பட்ட நெஞ்சுடன்
புழுவாய் துடித்தது
அவர்கள் உள்ளம்.
நின்றால் நடந்தால்
இருந்தால் கிடந்தால்
வந்தால் சென்றால்
என பலபோதும்
குறைகாண முயன்றனர்.
அவர்கள் செயல்கள்
அனைவரின் உள்ளத்திலும்
அதிர்ச்சியை விளைத்தன.
ஏனிவர்கள் இப்படி?
ஏனிந்த பிணக்கு?