கற்றதனால் ஆய பயனென்?

மார்ச்சு மாதம் துவங்கியதும் தேர்வு பரபரப்பும் துவங்கிவிடும். ஒருமுறை எனது ஆய்வுகள் தொடர்பாக நூல்கள் சிலவற்றை பெறுவதற்காக கல்லூரி நூலகர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன். தன் மகளை மேனிலைப் பொதுத் தேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகவும் தற்போது உதவ இயலாத நிலையில் இருப்பதாகவும் மார்ச்சு மாதத்திற்கு பிறகே இது தொடர்பாக உதவ இயலும் என்று கூறி மறுத்துவிட்டார். (நூலகரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அவரது மகள் மதிப்பெண் பெறவில்லை என்று இன்னொரு முறை நூலகரை சந்தித்தபோது அறிந்து கொண்டேன்.) தொழிற்கல்வி பட்டப் படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வுகள் எடுபட்டுவிட்ட நிலையில் மேனிலைப் பொதுத் தேர்வுகளின் மீது அரசு அதிக அக்கரை கொண்டுள்ளதுபோல் காட்டிக் கொள்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், அறிவுரைகள் நாளும் வழங்கப்படுகின்றன. தாளிகைகள், மாத இதழ்கள், தொண்டு நிறுவனங்களால் தங்கள் பங்கிற்கு அறிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகள் பயில அடிப்படையாக உள்ள பாடங்கள் தொடர்பான தேர்வுகளில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த பாடங்களுக்கான தேர்வுகளின் போது விதிமீறல்கள், ஒழுங்கீனங்கள் நடைபெறாமல் இருக்க அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படும். தேர்வறை முதன்மைக் கண்காணிப்பாளராகச் செயல்படும் அப்பள்ளி தலைமையாசிரியர் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார். அவரோடு அந்தப்பள்ளியின் அலுவலகப் பணியாளர்களும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர். ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தேர்வுக் கண்காணிப்பாளராகச் செல்லும் வழக்கமான நடைமுறை தொடரும்.

தேர்வுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டங்கள் தோறும் அரசால் அனுப்பப்படும் பார்வையாளர்கள்; வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வு கண்காணிப்பு படைகள்; காலணிகள், இடுப்புபட்டைகள் அணிதல் கூடாது என்ற கட்டுப்பாடுகள்; மாணவர்கள் தேர்வு நேரத்திற்கு அரை மணிநேரம் முன்பே தேர்வறையில் தயாராக இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள்; தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்படுவதாக சொல்லபடும் தண்டனைகள் தொடர்பான அளவுகடந்த அச்சுறுத்தல்கள்; அனைத்திற்கும் மேலாக பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் - நெருக்குதல்கள்; இத்தனை தாக்கங்களையும் தாண்டி தேர்வறையில் தேர்வெழுதும் விடலைப் பருவ மாணவர்கள்!

மார்ச்சு பொதுத் தேர்வுக்கு 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களை ஆயத்தம் செய்யும் நடவடிக்கைகள் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே துவங்கிவிடும். சனவரி மாதம் முதல் உச்ச கட்ட தயாரிப்புகள் ஆரம்பமாகும். மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தம் செய்ய பல்வேறு பயிற்சிகள், திரும்ப (Revision)த் தேர்வுகள், ஒப்புரு(மாதிரி)த் தேர்வுகள் என்று எத்தனையோ. மாணவர்களின் மனப்பாட ஆற்றலை மட்டுமே வளர்க்கும் இத்தகு பயிற்சிகள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கமும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு ஆண்டாகவே பிறக்கும்.

தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் உருவாக்கம் - சரிபார்த்தல், தேர்வறை கண்காணிப்பாளர்களாக செயல்படும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் - ஊதிய விவரப் பட்டியல் உருவாக்கம், மாணவர்களுக்கான தேர்வறை நுழைவு அட்டை உருவாக்கம், செய்முறை தேர்வுகளுக்கான கால அட்டவணை உருவாக்கம், விடைத்தாள் கட்டுகளைப் பெறுதல் போன்ற தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் சனவரி மாதம் முதல் வேகம் பெறும். பெரும்பாலான பள்ளிகளில் பள்ளி ஆண்டு விழா போன்ற நிகழ்வுகள் இந்தக் காலங்களிலே நடைபெறுகிறது. பள்ளி ஆண்டு விழா போன்ற நடவடிக்கைகளோடு தேர்வுக்கான ஆயத்தங்களும் பள்ளிகளில் முழு வீச்சில் நடைபெறும்.

இந்தச் சூழலில் பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்த பிற வகுப்பு மாணவர்களின் கல்விச் சூழல் எத்தகையதாக இருக்கும்?

பொதுத் தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்யும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி வேலைநாட்கள் 200 என வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 212 நாள்கள் வேலை நாட்களாக உள்ளது. கல்வியாண்டு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு பள்ளியின் கல்விச் செயல்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. முதல் பருவத்தின் இறுதியில் காலாண்டுத் தேர்வும் இரண்டாம் பருவத்தின் இறுதியில் அரையாண்டுத் தேர்வும் மூன்றாம் பருவத்தின் இறுதியில் ஆண்டிறுதித் தேர்வும் நடைபெறும். இம்மூன்று தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புயர்வு பெறுவர்.

பொதுவாக முதலிரண்டு பருவங்களில் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளின் குறுக்கீடுகள் குறைவு. (அனைவருக்கும் கல்வி இயக்கம் உருவாக்கப்பட்ட பின்பு நிலைமை தலைகீழ்.) விதிவிலக்கான சூழல்களில் மட்டும் இவ்விரு பருவ கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளில் தடை ஏற்படலாம். கற்றல் - கற்பித்தல் சூழலில் மாணவர்கள் அதிகம் பாதிப்படைவது மூன்றாம் பருவத்தில்தான். இப்போது தான் மேலே குறிப்பிட்டுள்ள பொதுத் தேர்வு ஆயத்தப் பணிகளைச் செய்தாக வேண்டும். அத்துடன் பள்ளி வகுப்பறைகள், தேர்வு அறைகளாக மாற்றப்படும். பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் போதாமையால் ஏனைய வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளும் தேர்வு அறைகளாக மாற்றப்படும். இதன் காரணமாக பிற வகுப்புகளின் அன்றாடக் கற்றல் - கற்பித்தல் செயல்கள் பாதிக்கப்படும். தேர்வறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்ல இயலாது. தேர்வுப் பணிக்கு கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படுவதால், பிற வகுப்புகளுக்கு கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகள் தடைபடும். இத்தகு நிகழ்முறையில் குறிப்பாக 9, 11 ஆம் வகுப்புகள் அதிக அளவில் பாதிக்கப்படும்.

மேனிலைப் பொதுத் தேர்வுக்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப் படவேண்டும். பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் புறத் தேர்வாளர்களாக வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர். செய்முறைத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வேலையும் பள்ளிகளில் முழு அளவில் நடைபெறும். இந்நாட்களில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களில் அன்றாடக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளில் பெருமளவு தொய்வு ஏற்படும்.

பொதுத் தேர்வுகள் மார்ச்சு மாதத்தில் துவங்கும். முதலில் மேனிலை(12)ப் பொதுத் தேர்வும் அதனைத் தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பு(10)ப் பொதுத் தேர்வும் நடைபெறும். தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் அன்றாட செயல்பாடுகள் முழுவதுமாக தடைபடும் காலம் இது. பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் ஏனைய வகுப்புகள் பிற்பகலில் மட்டுமே நடைபெறும். பள்ளியில் பெரும்பான்மை வகுப்பறைகள் தேர்வறைகளாக மாற்றப்பட்டிருப்பதால் பிற்பகல் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இருக்கைகளை மாற்றம் செய்தல் கூடாது, இருக்கைகளில் எழுதப்பட்டிருக்கும் தேர்வு(பதிவு) எண்களில் மாற்றம் செய்தல் - அழித்தல் கூடாது, கரும்பலகைகளில் எழுதப்பட்டுள்ள தேர்வு தொடர்பான விபரங்களை அழித்தல் கூடாது என்பன போன்றவை அவற்றுள் சில. இதனால் கற்றல் - கற்பித்தல் நிகழ்முறைகள் பெயரளவில் மட்டுமே நடைபெறும்.

பொதுவாக கல்வி போதனைக்கு ஏற்ற நேரமாக காலை நேரமே கருதப்படுகிறது. முற்பகலில் வீடுகளில் இருக்கும் மாணவர்கள், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பிற்பகலில் பள்ளிக்கு வருகின்றனர். வெயிலின் வெம்மை ஒருபுறம்; முற்பகலில் வீட்டில் இருக்கும்போது பொழுதைக் கழிப்பதற்கு மேற்கொண்ட விளையாட்டுகளின் களைப்பு மறுபுறம்; இதனால் வகுப்பறையில் சோர்வாக காணப்படும் மாணவர்கள்!

தேர்வுக் கண்காணிப்பாளராக வேறு பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மதியம் பள்ளிக்கு வருகை தர இயலாது. மேனிலைப் பிரிவு ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் பிற்பகல் வகுப்பிற்கு பள்ளிக்கு வருகை தராத நிலையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் நிலை இரங்கத்தக்கது. இதுபோன்ற நடைமுறையே பள்ளி இறுதி வகுப்பு(10)ப் பொதுத் தேர்விலும் பின்பற்றப்படுவதால் அந்நாட்களில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் நிலை பரிதாபகரமானது.

மேனிலைப் பொதுத் தேர்வு நடைபெறும் மார்ச்சு மாதத்தின் பிற்பகுதியில் பதினொன்றாம் வகுப்பு மாவட்டப் பொதுத் தேர்வுகள் துவங்கும். பெரும்பாலும் காலையில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வும், பிற்பகலில் பதினொன்றாம் வகுப்புத் தேர்வும் நடைபெறலாம். பொதுத் தேர்வுப் பணிக்கு சென்றுவிட்ட மேனிலைப் பிரிவு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர இயலாத நிலையில் பதினொன்றாம் வகுப்பு மாவட்ட பொதுத் தேர்வை நடத்தும் பொறுப்பு பள்ளியில் உள்ள ஏனைய ஆசிரியர்களின் மீது சுமத்தப்படும். இதனால் 6,7,8,9-ஆம் வகுப்பு மாணவர்களின் அரைநாள் பாடவேளையும் பாதிக்கப்படும்.

பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? தற்போது நடத்தப்படும் மாவட்டப் பொதுத் தேர்வு, மேனிலைப் பிரிவுகள் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட தொடக்க காலங்களில் நடத்தப்படவில்லை. மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில், மேனிலைப் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதில் பள்ளிகள் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கின. இதன் காரணமாக பதினொன்றாம் வகுப்பு கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டது. பெரும்பான்மையான பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திலேயே பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் தராமல் பெயரளவில் மட்டும் கற்பித்துவிட்டு பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை இரண்டு ஆண்டுகளும் கற்பிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதே பதினொன்றாம் வகுப்பிற்கான மாவட்டப் பொதுத் தேர்வுகள்.

மாவட்ட அளவில் நடத்தப்படும் பதினொன்றாம் வகுப்புத் தேர்வுக் கட்டணமாக உரூ.50/-வசூலிக்கப்படும். தேர்வின் விடைத் தாள்கள் அந்தந்த பள்ளிகளில் திருத்தப்படாமல் மாவட்டத்திலுள்ள வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு திருத்தப்படும். (தற்போது இம்முறை குமரி மாவட்டத்தில் நடைமுறையில் இல்லை. பிறமாவட்டங்களில் என்ன நிலை என்பது தெரியவில்லை.) தேர்வு முடிவுகள் மாவட்ட அளவில் நாளிதழ்களில் வெளியிடப்பட்டாலும், பொதுத் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் ஒரு மாணவரின் தேர்ச்சியை முடிவு செய்யும் அதிகாரம் அம்மாணவன் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடமே உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புயர்வு வழங்கும் வகையில் தேர்ச்சிப் பட்டியல் உருவாக்கப்படும்.

ஒரு பள்ளியில் அனைத்து மாணவர்களும் வகுப்புயர்வு பெறுதல் இயலுமா? கீழ் வகுப்புகளில் குறிப்பாக 6,7,8,9 வகுப்புகளில் குறைந்த அளவு தேர்ச்சி மதிப்பெண் 25 என வரையறுக்கப்பட்டு மாணவர்களின் வகுப்புயர்வு பட்டியல் உருவாக்கப்படும். பெரும்பாலும் தேர்வெழுதும் மாணவர்கள் 25 மதிப்பெண்கள் பெறும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். ஆனால் பதினொன்றாம் வகுப்புத் தேர்வில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது. ஒரு பாடத்தில் மிகக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவனின் மதிப்பெண்கள் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் முடிவு செய்யப்படும்.

இறுதியாக ஏப்ரல் மாதத்தில் 6,7,8,9-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் தொடங்கும். முன்பெல்லாம் எட்டாம் வகுப்புத் தேர்வுகள் அரசு பொதுத் தேர்வு போன்று நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்களுக்கும், மாநில அளவில் ஆங்கில பாடத்திற்கும் வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இம்முறை நடைமுறையில் இல்லை. ஆயினும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேர்வுக் கட்டணமாக உரூ. 2 /- வசூலிக்கும் நடைமுறை தொடர்கிறது. நடைபெறாத பொதுத் தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் எதற்கு?

கல்வியாண்டின் இறுதிப் பருவத்தில் முழுவதுமாக அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள் ஆண்டிறுதித் தேர்வினை எதிர்கொள்கிறார்கள். முறையான கண்காணிப்பின்மை, வழிகாட்டுதலின்மை, பகுதி நேர வகுப்புகள் போன்ற காரணங்களினால் மாணவர்களின் கல்விச் சூழல் சிதைந்த நிலையில் தேர்வுகள் நடைபெறுகின்றன. சூழல்களில் தாக்கம் விடைத்தாள்களில் வெளிப்படும். இச்சூழ்நிலையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாமல் பார்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு வெற்றிகரமாக ஒரு கல்வியாண்டு நிறைவு செய்யப்படும்.


(இக்கட்டுரை மார்ச்சு 2009 ஒளிவெள்ளம் இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: