என்ன செய்யப் போகிறோம்?


மாவட்ட ஆசிரியக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினரால்  நடத்தப்பட்ட கருத்தரங்கம் அது. கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள்(பத்துக்கும் குறைவானவர்கள் அதிலும் குமுக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் அடக்கம்) என அரங்கம் நிறைந்திருந்தது. காலை பத்து மணியளவில் கருத்தரங்கம் தொடங்கியது. கல்வி அதிகாரிகள்(உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்), பணிநிறைவு கல்வி அதிகாரிகள் என அனைவரும் கருத்தரங்கத்தின் நோக்கத்தைக் குறிப்பிட்டு கருத்தரங்கு சிறப்படைய தங்கள் வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றார்கள். வழக்கமான இத்தகைய தொடக்க நிகழ்வுகளுக்காக ஒரு மணி நேரம் செலவிடப்பட்டது.

            தொடர்ந்து மாவட்ட ஆசிரியக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கருத்தரங்கத்தின் நிகழ்வுகள் பற்றிப் பேசத் தொடங்கினார். தொடக்க நிகழ்வுகளுக்கு அதிக நேரம் செலவிடப்பட்டதையும் கல்வி அதிகாரிகளின் உரைவீச்சைக் கட்டுப்படுத்த முடியாத தனது இயலாமையையும் வெளிப்படுத்தினார். கருத்தரங்கத்தின் நிகழ்வுகள் மற்றும் கருத்தாளர்களின் கருத்துகளையும் அன்று மாலையே சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதால் மதிய வேளைக்கு முன்பாக ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைத் தொகுத்து வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

            வருகை தந்திருந்த ஆசிரியர்கள் தொடக்கநிலை, இடைநிலை எனப் பகுக்கப்பட்டனர். குறிப்பிட்ட பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தனித்தனியே குழுக்களாக அமர்த்தப்பட்டனர். தொடக்க நிலையில் ஐந்து பாடங்களுக்கென ஐந்து குழுக்களும், இடைநிலையில் ஐந்து பாடங்களுக்கென ஐந்து குழுக்களுமாக மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டன.

            தேநீர் இடைவேளைக்குப் பின் 11.30 மணியளவில் இரண்டாம் அமர்வு தொடங்கியது. ஒவ்வொரு குழுவும் தத்தமக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்யத் தொடங்கினர். வழங்கப்பட்ட படிவத்தில் உரிய முறையில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். மதிய இடைவேளைக்குப்பின் ஒவ்வொரு குழுவும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். பொது மக்களுக்கும் தங்கள் கருத்துகளைக் கூற வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

            மதிய இடைவேளைக்குப் பின்னர் மூன்றாம் அமர்வு தொடங்கியது. முதன்மைக் கல்வி அலுவலர் வருகை புரிந்திருந்தார். கருத்தரங்கின் பொருள் வரைவினை தான் முழுமையாகப் படிக்கவில்லை என்றும் மேலோட்டமாகவே பார்க்க முடிந்ததாகவும் தெரிவித்தார். கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அனைவரும் அதனை முழுமையாக ஆய்வுசெய்திருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

            பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூற அழைக்கப்பட்டனர். ஒன்றிரண்டு பேர் தங்களுக்குத் தெரிந்த ஏதேதோ கருத்துக்களைக் கூறினர். அவை எதுவும் பதிவுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து ஆசிரியர்களின் கருத்துகளை முதன்மைக் கல்வி அலுவலர் வினவினார். ஆசிரியர் ஒருவர் முன்வந்து தனது கருத்தினைக் கூறினார். உடனே குறுக்கிட்ட மா.ஆ.க.ப.நி. முதல்வர், ஆசிரியர்கள் தாங்கள் ஆய்வு செய்த பகுதியில் மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். பொதுவான தங்களின் கருத்துகளைக் கூற அனுமதியில்லை என்று தடுத்துவிட்டார். சற்றேறக்குறைய 3 மணியளவில் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைக் கூறி முடித்திருந்தனர். கருத்துப் படிவங்கள் முறையாகப் பெறப்பட்டு சென்னை செல்ல ஆயத்தமாக இருந்தவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

            தேநீர் இடைவேளைக்குப் பின்பு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வருகைச் சான்று, பயணப்படி, மதிப்புறு ஊதியம் வழங்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் கருத்தரங்கம் இனிதே நிறைவெய்தியது.

            சமச்சீர் கல்வியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்ட வரைவு குறித்த கருத்தரங்கு ஒன்றில் நடைபெற்ற நிகழ்வுகளே நாம் மேலே தந்துள்ளது.

            சமச்சீர் கல்வி தொடர்பாக முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடப்படாத நிலையில், வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பாகவும், முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கை மீதும் பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் கல்வியாளர்களாலும் பொதுமக்களாலும் எழுப்பப்பட்டு(விரிவுக்கு கட்டுரையாளர் அக். 2009 தமிழினி இதழில் எழுதியுள்ள என்னாகுமோ ஏழையின் கல்வி என்ற கட்டுரையைப் பார்க்க) அதற்கான விடைகள் தெரியாத நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த பொது பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

            பொது பாடத் திட்ட வரைவு வெளியான ஓரிரு நாள்களுக்குள்ளாக தமிழகத்தின்  அனைத்து மாவட்டங்களிலும், பொது பாடத்திட்ட வரைவு - கருத்தரங்குகள்  நடத்தப்பட்டன. கருத்தரங்கில் கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் பாடத் திட்ட வரைவினை படித்திருக்கவில்லை. மேற்கூறிய கருத்தரங்கில் பங்கேற்ற கட்டுரையாளர் தவிர வேறு எந்த ஆசிரியரும் பொது பாடத்திட்ட வரைவினைப் பார்த்திருக்கவில்லை. (முன்னரே வழங்கப்பட்டு கருத்து, கூற பணிக்கப்பாட்டாலே பெருபான்மை ஆசிரியர்கள் அதற்கு முகாமை வழங்காத சூழலில், இணையத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள வரைவை வேலை வினைகெட்டு பதிவிறக்கம் செய்து படிப்பார்கள் போலும்!). கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும் கல்வி அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டவர்கள். தானா விரும்பி கலந்துகொண்டவர்களில் கட்டுரையாளர் மட்டுமே  ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு தொண்டு நிறுவன ஊழியர்களும் குமுக ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

            பொது பாடத்திட்ட வரைவு நகல்கள் ஒன்றிரண்டினை கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் கொண்டுவந்திருந்தனர். அவற்றை ஒவ்வொரு குழுவுக்கும் பகுதி பகுதியாக பிரித்து வழங்கினர். இவ்வாறு ஒன்று முதல் பத்து வகுப்புகள் வரை ஒரு மாணவனுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்பொருளை உள்ளடக்கிய பொது பாடத்திட்ட வரைவு ஏறக்குறைய 2 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுவிட்டது.

            ஒவ்வொரு ஐந்து முதல் பத்து ஆண்டுகளிலும் பாடப் புத்தகங்கள் மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாடப்புத்தகங்கள் மாற்றப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

            பாடப் புத்தகங்கள் மாற்றப்படும் போது, அன்றைய சூழலுக்கு ஏற்ப கலைத்திட்டம்(Carriculam) உருவாக்கப்படும். கலைத்திட்டம் என்பது பள்ளிகளில் உள்ள பாடச் செயல்கள், வகுப்பறைப் பட்டறிவுகள், வகுப்பறைக்கு வெளியே கற்கும் பாட இணைச் செயல்கள், அவற்றால் ஏற்படும் பட்டறிவுகள் ஆகிய அனைத்தும் அடங்கியது. தமிழகப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கலைத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், குமுக அறிவியல், உடற்கல்வி போன்ற பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

            மாணவர்களின் பல்வேறு பயன் கருதியே பள்ளிக் கலைத்திட்டத்தில் பாடங்கள் உருவாக்கப்படுகின்றன. பாடங்களால் பெறப்படும் பயன்களை வாழ்க்கைப் பயன்கள், குமுகப் பயன்கள், அறநெறிப் பயன்கள், பண்பாட்டுப் பயன்கள், பொழுதுபோக்கு/ஓய்வுப் பயன்கள், தொழிற்பயன்கள் என பலவாறாக கூறலாம்.

            கலைத்திட்டம் இறுதி செய்யப்பட்ட பின்பு, ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கு வழங்க வேண்டிய பாடப் பொருள்களை வரையறுத்து பாடத்திட்டம் உருவாக்கப்படும். பாடத்திட்ட வரைவு அரசிதழில் வெளியிடப்படும். அதன் நகல்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். பொதுமக்கள் அரசு அச்சகத்தினின்று வாங்கிக் கொள்ளவும் வகை செய்யப்பட்டிருக்கும். அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க மூன்று மாத கால இடைவெளி தரப்படும். பெறப்பட்ட கருத்துகளை அதற்கென அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்து ஏற்கத்தக்கவை, ஏற்கப்படாதவை ஏற்கப்படாததற்கான காரணங்கள் போன்றவற்றைத் தொகுத்து அரசுக்குப் பரிந்துரைப்பர். அதன்படி பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்.

            இறுதி செய்யப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் எழுதுவதற்கு குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் வகுப்பிற்கும் தனித்தனியே நூலாசிரியர்கள், மேலாய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் இப்பணியை  மேற்கொள்வர். இவ்வாறு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் நடைமுறை அமைந்திருக்கும்.

            அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பொது பாடத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு மேற்சொன்ன நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. கலைத்திட்டம் உருவாக்கப்படாமல் பாடத்திட்டம் மட்டும் உருவாக்கி வெளியிடுவது என்பது கதை உருவாகுவதற்கு முன்பே திரைக்கதை எழுதுவது போன்றது என்றால் மிகையில்லை. வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேசிய கலைத்திட்ட வரைவு(National Corriculam Framework) 2005 வழிகாட்டியாகக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை-1986 உருவாக்கப்பட்ட பின்பு இத்தகையதொரு நடவடிக்கையை அரசு பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. இதற்கு முந்தைய பாடத்திட்ட உருவாக்கத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டிருக்கிறது.

            தேசிய கலைத்திட்ட வரைவு என்பது நாடு முழுமைக்குமான கல்வி ஏற்பாட்டினைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவதாகும். அதனை நமது சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாதது. இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில், தேசிய கலைத்திட வரைவு அப்படியே பின்பற்றப்பட்டுள்ளதா, நமது குமுகச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது யாரும் அறியாத கமுக்கமே.

            தேசிய கலைத்திட்ட வரைவை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அப்படியே பின்பற்றுவதாகக் கொண்டாலும் அதனை பொது பாடத்திட்ட வரைவுடன் அனைவரது பார்வைக்கும் தந்திருக்க வேண்டும். அவ்வாறு தரப்படாத நிலையில் நமக்கு ஏற்படும் ஐயம் நியாயமானதே. பாடத்திட்டங்களில் காணப்படும் பாடப் பொருள் சார்ந்த ஒருங்கிணைப்பின்மை நமது ஐயத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

            மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான கல்வி பற்றிய கலைத்திட்டம் இல்லாத நிலையில் பாடத்திட்ட வரைவு பற்றிய ஆய்வுகள், கருத்துக் கேட்பு நிகழ்வுகள், கருத்தரங்கங்கள் எல்லாம் வானத்தில் சிலம்பம் செய்வது போன்றதே.

            இவ்வளவு இடையூறுகளுக்கு நடுவில் பொது பாடத்திட்ட வரைவினை படிக்கின்ற நிலையில் பின்வரும் குறைகள் முதன்மை பெறுகின்றன.

 • பொதுப் பாடத்திட்ட வரைவு அரக்கப் பரக்க உருவாக்கப்பட்டுள்ளது.
 • வரைவு ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
 • தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், குமுக அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
 • உடற்கல்வி, கணினி அறிவியல், அறிவியல் தமிழ், சுற்றுச்சூழல் கல்வி, இசை, ஓவியம், விவசாயம், நெசவு, தையல் போன்ற பாடங்களுக்கு பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.
 • தமிழ் மொழிக்கான முகாமை குறைக்கப்பட்டு மூன்றாவது மொழியாக கற்பிக்கத் தகுந்தகுந்த வகையிலே பாடப்பொருள்வைப்பு உள்ளது.
 • குமுக அறிவியல் பாடத்தில் தமிழக வரலாற்றின் முகாமை குறைக்கப்பட்டுள்ளது.
 • தொடக்க நிலைக்கான சூழ்நிலையியல் பாடத்திட்டத்தில் வழக்கமாக  இடம்பெறும் மாவட்ட வரலாறு கழிக்கப்பட்டுள்ளது.
 • சிறுபான்மை மொழிகள் மற்றும் கீழ்த்திசை மொழிகளுக்கான பாடத்திட்டம்  வெளியிடப்படவில்லை.
 • பதின்ம(மெட்ரிக்)ப் பள்ளிகளில் பின்பற்றப்படும் பொருளியல் பற்றிய பாடப்பொருள் குமுக அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
 • ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் இடையே ஒருங்கமைவு காணப்படவில்லை; பாடத்திட்டங்கள் வெவ்வேறு வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

எதிர்கால குமுகச் சவால்களை வளர்ந்துவரும் தலைமுறை எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆற்றல் பற்றியோ, குமுகம் சார்ந்த இன்றைய தேவைகளை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களிடம் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய  தேவை பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற மனநிலையில் பாடத்திட்ட வரைவு அமைந்துள்ளது. குமுக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்பதான கல்வியின் நோக்கத்தைத் தனிமனித மேன்பாட்டுக்கான கல்வி என்பதாக சுருக்கிக் கொள்வதாக பொதுப் பாடத்திட்ட வரைவு உள்ளது.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(NCERT) ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொண்ட பணியைச்  சில நாட்களில் பதினைந்து நாட்களில் பாடத்திட்டம் உருவாக்கல், இணையத்தில் வெளியிடல், ஏழு நாட்களில் மக்கள் கருத்தறிதல், ஓரிரு நாட்களில் பாடத்திட்டத்தை இறுதி செய்து பாடநூல்கள் எழுதத் தொடங்கிவிடல் என்று பெருமை அடித்துக் கொள்வதற்காக மாநிலக் கல்வித்துறை இதனைச் செய்வது போல் தெரியவில்லை. 1986இல் இராசீவு காந்தி கல்வித்துறையை அடித்தள மக்களிடமிருந்து பிடுங்கி அயல்நாடுகளுக்கும் உலகளாவுதலுக்கும் ஏற்ப மாற்றியமைத்துத் தொடங்கி வைத்த நிகழ்முறையின் படிமுறை வளர்ச்சிதான் இது என்பதில் ஐயமில்லை. இவ்வாறு மக்களைத் தொட்டு நிற்கும் மாநில அரசுகளிடமிருந்து அவற்றுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த அதிகாரங்களும் பிடுங்கப்பட்டுவிட்டன. மக்களின் மொழிகள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளன. கல்விக்காகச் செலவிடப்படும் பல்லாயிரம் கோடிப் பணம் உள்நாட்டுக்குப் பயன்படப் போவதில்லை.

என்ன செய்யப் போகிறோம்? 

என்னாகுமோ ஏழையின் கல்வி?


கோட்டை நோக்கி ஒரு பேரணி புறப்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் ந்திய  மாணவர் முன்னணி(SFI)யைச் சார்ந்த இளம் பெண்களும் ஆண்களும். கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு இசைவு இல்லை எனக் கூறி காவல்துறையினர் தடுக்க, தடையை மீறி கோட்டை நோக்கி முன்னேற பேரணியில் பங்கேற்றவர்கள் முயல, வழக்கம்போல் தடியடி நடத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் சிதறி ஓடத் தொடங்குகிறார்கள். தடியடியில் காயம் பட்ட இளம் பெண்களும், ஆண்களும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

            தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ‘சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியில் நடைபெற்ற நிகழ்வுகளே மேற்சொன்னவை. மீண்டும் ஒருமுறை சமச்சீர் கல்வி பற்றிய குரல்கள் தமிழகமெங்கும் எதிரொலித்த. சட்டமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு குரல்கள் ஒலித்தன. மறுநாள் முதல்வர் பேரவையில் அறிக்கை ஒன்றினை அளித்தார்.

            சமச்சீர் கல்வி முறை தொடர்பாக முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மூத்த இ.அ.ப. அதிகாரியான எம்.பி. விசயகுமாரைக் கொண்டு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவ மாநிலத் திட்டக் குழுவும் கேட்டுக் கொள்ளப்பட்டுளது. இந்தக் குழுவின் அறிக்கை வந்ததும் அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என்று முதல்வர் வெளியிட்ட கேள்வியும் நானே பதிலும் நானே வடிவில் அமைந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

            பள்ளிக் கல்வி அமைச்சரும் தம் பங்கிற்கு வரும் கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

            ஆள்வோரின் இத்தகைய அறிவிப்புகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. கடந்த பள்ளி இறுதிப் பொதுத்தேர்வுகளில் அனைத்து வகை பாடத் திட்டங்களுக்கும் மொத்த மதிப்பெண்கள் 500 என வரையறை செய்யப்பட்டிருப்பதும் இதனைச் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் அரசின் முயற்சியின் முதல்படி என பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்ததும் நினைவிருக்கலாம். அப்படியானால் தற்போதைய அறிவிப்பு இரண்டாம் படியாக அமையுமோ?

            சமச்சீர் கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் வெளிவராத நிலையில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கை செய்ய வேண்டியதின் பின்னணி நமக்கு விளங்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் கல்வியாளர்களிடையேயும் பொது மக்களிடமும் முனைப்பாக எழுந்துள்ளன. அவற்றுள் சில:
 • முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள அறிக்கையில் எவை எவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன? எவை எவை ஏற்றுக் கொள்ளப்படாமல் விலக்கப்பட்டுள்ளன?
 • சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான கால அளவு எவ்வளவு?
 • மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தாய்மொழி வழிக் கல்வி, தொடர்பு மொழி இவை தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன?
 • இப்போதுள்ள நான்கு கல்விக் குமுமங்கள்(வாரியங்கள்) அவ்வாறே தொடருமா? அல்லது கலைக்கப்படுமா?
 • முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையில் கூறியவாறு தமிழ்நாடு மாநில பள்ளிக் (சமச்சீர்) கல்வி வாரியம் அமைக்கப்படுமா?
 • ஒரே கல்விக் குழுமம் உருவாக்கப்பட்டால் மக்களாட்சி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கு அமைப்பு விதிகள் உருவாக்கி செயல்படுத்தப்படுமா? அல்லது பல்லாயிரம் மாணவரது கல்வி பற்றிய முடிவுகளை அலுவலர்களே எடுத்து செயல்படுத்தும் (அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக எம்.பி. விசயகுமார், இ.அ.ப. இருந்த போது செயல் வழிகல்வி, படைப்பாற்றல் கல்வி என்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியது போன்று) நிலைதொடருமா?
 • நடைமுறையில் உள்ள கல்வித்துறை தொடர்பான பல்வேறு வகையான சட்டங்கள், விதிகள், ஆணைகள் போன்றவற்றை முறைப்படுத்தி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் புதிய கல்விச் சட்டம் உருவாக்கப்படுமா? (பிற மாநிலங்களில் நடுவரசு கல்வி குமுமப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் மாநிலச் சட்டத்திற்கும் உட்பட்டுள்ளதை நினைவில் கொள்வோமாக.)
 • ஒரே கல்விக் குமுமம் உருவாக்கப்படும் நிலையில் நிர்வாக செயல்பாடுகள் தடையின்றி நடைபெற மண்டலங்களாக பிரிக்கும் நடைமுறைகளை அரசு பின்பற்றுமா?
 • ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்த வசதியாக புதிய பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கல் போன்ற பணிகளில் பேரா.யசுபால் மற்றும் சிவஞானம் குழுக்கள் பரிந்துரைத்த வண்ணம் இப்பணிகளில் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா? அல்லது சென்ற இரு பாடத்திட்டங்கள் உருவாக்கலிலும், பாடநூல்கள் எழுதுதலிலும் மிக அதிக அளவில் பல்கலைக்கழக, கல்லூரி, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பேற்றது போன்ற நடைமுறையே தொடருமா?
 • சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பின் தற்போது, நடைமுறையில் உள்ள தொடக்க வகுப்புகளுக்கான செயல்வழிக் கல்வி உயர் தொடக்க வகுப்பகளுக்கான படைப்பாற்றல் கல்வி என்ற கற்றல் - கற்பித்தல் முறைகள் தொடருமா? அவ்வாறு தொடருகின்ற நிலையில் மெட்ரிக்குலேசன், ஒரியண்டல், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலும் இக் கற்றல் - கற்பித்தல் முறைகள் விரிவுபடுத்தப்படுமா?
 • பாடத்திட்டங்கள், பாடநூல்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு, பாடநூல்களின் ஆங்கிலப் படிகளை தமிழில் மொழிபெயர்க்கும் முந்தைய நடைமுறை தொடருமா? அல்லது தரமான பாடநூல்கள் உருவாக்கத்திற்கு முதலில் தமிழில் பாடநூல்கள் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா?
 • தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தேர்வு முறைகள் அவ்வாறே தொடருமா? அல்லது கைவிடப்படுமா?
 • முனைவர் முத்துக்குமரன் குழு வழிகாட்டுதல்படி ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என மாற்றி அமைக்கப்படுமா? அல்லது தற்போதுள்ள 1: 40 என்ற நிலையே நீடிக்குமா?
 • பொதுவாக உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுக்கு உரிய பாடநூல்கள் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு மற்ற நிலைகளில் பாடநூல்கள், எந்த முறையில் கற்பிப்பது போன்ற கல்வி சம்பந்தமான எல்லாவற்றையும் பள்ளி நிலையில் ஆசிரியர் குழுவாக அமைத்துத் தீர்மானப்பது, செயல்படுத்துவது என்ற நிலையே சிறப்பானது. மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இது போன்ற சுதந்திரம் அல்லது தன்னாட்சி செயற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது. இதே போன்ற சுதந்திரம் மற்ற எல்லாப் பள்ளிகளுக்கும் அளிப்பது கல்வியில் சமச்சீர் நிலையை உருவாக்கவும், கல்வி மேம்பாட்டுக்கு உதவும். (முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கை, பத்தி 12.76) என்ற முனைவர் முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை செயல்படுத்தப்படுமா?

இந்திய கல்வி முறையை மறுபரிசீலனை செய்த பேரா. டி. எஸ். கோத்தாரி தலைமையிலான கல்வி ஆணையம்(1964-1966) நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த அடிப்படை சிந்தனைகள் மற்றும் தேவையான வரையறையை அளித்தது. கல்வி ஆணையத்தின் முக்கியமான பரிந்துரை என்பது சமூக இணக்கமும், சமூக சமத்துவத்தை வற்புறுத்தும் நோக்கோடு செயல்பட்டு பொதுவான பள்ளி அமைப்பை உருவாக்குதல் ஆகும். கல்வி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை(1968) கல்வி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறிக்கோளான சமுதாய இணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வண்ணம் பொதுவான பள்ளி அமைப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

1966-ல் ஏற்படுத்தப்பட்ட ஆச்சாரியா இராமமூர்த்திக் குழுவானது தன்னுடைய ஆய்வறிக்கையில் பொதுப்பள்ளி கல்வி முறை(சமச்சீர் கல்வி) என்பதற்கு இதுவரை அடித்தளம் அமையாததற்காக பின்வரும் காரணங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது.

 • பொருளியல் மற்றும் சமூக வேறுபாடுகள் இருத்தல், நல்ல வசதியான சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல கட்டமைப்புடைய சிறந்த ஆசிரியர்களையும், கற்பிக்கும் முறையில் நல்ல தரங்களையும் கொண்ட பள்ளிகளுக்கு அனுப்புவதால் சாதாராண பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை. இதன் விளைவாக அவற்றிற்கு  குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
 • சிறுபான்மையினர்கள் சொந்த கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் அவர்களுக்கு அரசமைப்பு சட்டப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. இதனால் அவர்கள் பொது பள்ளி கல்வி முறை என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
 • அரசாங்கப் பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து மட்டமானதாகவே இருந்து வருதல்.
 • போதிய ளவிற்கு அரசியல் உறுதி இல்லாதிருத்தல்.
 • நன்கொடை கட்டணங்கள் வசூலிக்கின்ற தனியார் ஆங்கிலப் பள்ளிகளும், அதிக செலவு பிடிக்கக் கூடியதான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்ற பள்ளிகளும் அதிகரித்திருத்தல்.
 • அரசாங்கத் துறையிலான கல்வி நிறுவனங்களில் மாணவர்களில் தனிப்பட்ட பிரிவினருக்காக சைனிக் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகள் தோற்றுவிக்கப்படுதல்.

            மேற்கூறிய காரணங்கள் இன்றளவிலும் எந்தவித மாற்றங்களையும் காணாமல் அவ்வாறே உள்ளன. கல்வி அமைப்பில் உள்ள இத்தகைய தடைகளை களையாமல் உள்ளது உள்ளபடி வைத்துவிட்டு பெயரளவில் சமச்சீர் கல்வி என்ற ஒன்றை நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவது ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட பல்வேறு கல்வித்திட்டங்கள் போன்று இத்திட்டமும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்பது போலவே அமையும்.

            உலகளாவிய சந்தை விசைகள், சாதி – சமயக் குழுக்கள், தனியார் நிறுங்கள் போன்றவை தீர்மானிக்காத ஒரு பொதுவான கல்வி முறையை உருவாக்க இந்திய மக்கள் பரந்துபட்ட அளவில் அணி திரள வேண்டிய வேளை இது. இதனை இனங்காட்டுவதாகவே நாம் முதலில் கூறிய நிகழ்வினை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.