இந்தியா வளர்ந்திருக்கிறது!

பொன்விழா முடித்து
வைரவிழா கண்டு
பவழவிழா நோக்கி
சுதந்திர இந்தியா.
இத்தனை ஆண்டுகளில்......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


இலக்கினை நோக்கி
தட்டுத் தடுமாறி,
இங்கிது சரிதான்
தவறு அங்கிருக்குமோ?
உறுதியாய் தெரியாது
குழப்பமும் கலக்கமும்
மனிதர்கள் உள்ளத்தில்......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


அத்துமீறல்களே சுதந்திரமாம்
சாலை விதிகளாகட்டும்
கவிதை வரிகளாகட்டும்
வரிசை முறைகளாகட்டும்
பேசுவது என்பதாகட்டும்
எதிலும் மீறல்களே
சுதந்திரமாக உணரப்படுகிறது......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


கூட்டமாக சென்றால்
நியாயங்கள் எடுபடும்.
தனிமனித சுதந்திரம்
தகுதியற்றது ஆகிறது.
தவறான புரிதல்கள்,
கலையும் இலக்கியமும்
விதிவிலக்கல்ல இதற்கு......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


தன்னலம் மிக்கோர்
பெருக பெருக
சமூகம் தேசம்
இவை சார்ந்த
கவலைகள் மாய்ந்தன.
வழியும் சுதந்திரத்தில்
வழுக்கி விழுகிறார்கள்......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


சாதீயம் மறைந்து
சமயவெறி தகர்ந்து
சமத்துவம் ஒங்கி
மனிதம் மலரும்
உண்மை சுதந்திரம்
வசப்படும் ஒருநாள்.
அவ்வினிய நன்நாளில்......
இந்தியா வளர்ந்திருக்கும்.

மரண விளைச்சல்!!!

திடீரென யாரும் அறியாமல்
திடீரென......

ஏனிந்த அவசரம் ஏனோ
ஏனோ

ஆரவாரம் ஏதுமின்றி திக்விஜயம்
அக்னிதேவன்

காலன் வருகை பராக்
பராக்

மாடியிலே மகேஸ்வர தரிசனம்
மாணவர்களுக்கு

மரணம் ஒத்திகையின்றி அரங்கேற்றம்
குடந்தையில்

கச்சிதமாக மிக கச்சிதமாக
அவசரமாக

மலரும் வேளையிலே கருகிய
மொட்டுகள்

கொத்துக் கொத்தாக பொசுங்கிய
உடல்கள்

அதிர்ச்சியில் உறைந்தார் பெற்றோர்
மற்றோர்

நூற்றுமேனிக்கு சற்று குறைவாக
மரணவிளைச்சல்

இனியொரு கும்பகோணம் கூடாது
கூடாது.