சமச்சீர் கல்வி

′சமச்சீர் கல்வி′ பற்றி மிக உரத்த குரல்கள் தமிழகத்தில் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தேசிய, மாநில அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள், சமூக கல்வி அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என பலதரப்பட்ட நிலையிலும் ′சமச்சீர் கல்வி′ குறித்து பேசப்படுகின்றது. தமிழகத்தை ஆளும் தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையிலேயே இது குறித்து கூறியுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை 08.09.2006 அன்று ஓர் அரசாணை [அரசணை(நிலை)எண்: 159]யை வெளியிட்டது. அதன் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையிலான இக்குழுவில் எட்டு கல்வியாளர்கள் உறுப்பினர்கள்.

தமிழகத்தின் பல்வேறு கல்வியாளர்கள், கல்வித்துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் தயாரித்துள்ள அறிக்கையை இக்குழு தமிழக முதல்வரிடம் 24-07-2007இல் வழங்கியுள்ளது. பள்ளிகளில் ஒரே தரமான ′சமச்சீர்′ முறையை செயல்படுத்துவது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்வியாண்டிலிருந்து ஒன்று முதல் 6 வகுப்புகளில் சோதனை அடிப்படையில் அரசு பள்ளிகளில் மட்டும் ′சமச்சீர்கல்வி′ நடைமுறைப் படுத்தப்படும் என ′பள்ளிக் கல்வி′ அமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது கல்வி அமைப்பானது ஓர் அறிவு தரும் அமைப்பாக மட்டும் இயங்கவில்லை. ஆட்சியாளர்களுக்குத் தக்கவாறு “கல்வி” தம்முடைய குரலை மாற்றி மாற்றி ஒலித்து வந்துள்ளது. வன்முறை எதுவுமில்லா ஒருவகை அதிகாரத்தை எளிதாக நிலை நாட்டுவதற்கான கருவியாக கல்வி பயன்பட்டுள்ளது தெளிவு.

சமூக, பொருளாதார பண்பாட்டு தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் இயங்கு தளமாக கல்வி உள்ளது. அரசியலின் செயல்முறைக் களமாக கல்வி மிக நுண்மையாக இயங்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மீது வினைபுரியவும் கல்வியை அதன் இயக்கத்தை வரலாற்று ரீதியில் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

இயற்கையில் எந்தவொரு உயிரியுடனும் ஒப்பிடும்போது மனிதன் மட்டும் பிறந்து பல ஆண்டுகள் பிறரைச் சார்ந்து வாழ்பவனாக இருக்கிறான். மனிதன் தானே இயங்கும் நிலையை அடைய கல்வி இன்றியமையாததாக உள்ளது. கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். பிறந்த குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் கல்வி கற்பவர்களாகவே இருக்கிறோம்.

மனித இனம் பல்லாண்டுகாலம் முயன்று உருவாக்கிய நாகரிகத்தினை மங்காமல் பாதுகாத்து அதனை மேலும் சிறப்பாக்க கல்வி உதவுகிறது. உலகில் ஒருவர் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பாக கல்வி உள்ளது. ஒருவர் பெறுகின்ற கல்வியானது அவரது ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து, ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்ய உதவுகிறது.

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னதும், கட்டை விரலை குரு தட்சணையாக கேட்டதும் மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்ததும், கைகட்டி வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் கற்றதும் சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் என்ற வகைப்பாடுகளால் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஓரங்கட்டப்பட்டதும் கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது. இது அன்றைய சூழல்.

இன்றைய சூழலில், அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் கல்வி என்பதற்கான கருத்துருக்கள் வெகுவாக மாறியுள்ளன. அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி, அந்நிலையிலிருந்து மாறி பொருளீட்டும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. பல்வகை விளம்பரங்களில் கல்வி கூவி விற்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம். கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

ஆங்கிலர்கள் ஆண்டபொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலே என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விமுறை ஆங்கிலர்கள் சென்றபிறகும் கூட இங்கே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால் ஒன்றும் அறியாத மழலைகள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.

தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் நிலையிலும் தொடக்க நிலையில் தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்க வேண்டும் என்பது கூட இங்கே ஏட்டளவிலே தான் உள்ளது. இதை உணர்ந்து செயல்படுகின்ற பெற்றோர்களோ ஆசிரியர்களோ அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ இங்கு இல்லை.

தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கற்றல் கற்பித்தல் முறைகளிலும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு. நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களில் முக்கியமான சிலவற்றைப்பற்றி அறிதல் இன்றியமையாதது.

மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகள்:

அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் இப்பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் இந்தப் பள்ளிகளையே நம்பியுள்ளனர். அரசின் இலவய பாடப்புத்தகம், மதிய உணவு, சீருடை, இலவய பேருந்து பயண அனுமதி, மிதிவண்டி போன்றவை இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என்ற வகைப்பாட்டில் பள்ளிகள் இயங்குகின்றன. எண்பது நூற்று மேனிக்கு அதிகமானவர்கள் இந்தப் பள்ளிகளில் கல்வி கற்கிறார்கள். பெரும்பாலும் பயிற்று மொழி தமிழ். நகரப் பள்ளிகளில் ஒரு பிரிவு ஆங்கில வழிக் கல்வியாக அமையும். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எந்தவித கல்விக் கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அரசே ஊதியம் வழங்குகிறது.

ஒரியண்டல் பள்ளிகள்:

இவ்வகைப் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டமே பின்பற்றப் படுகிறது. சமற்கிருதம், உருது, அரபி போன்ற மொழிப் பாடங்கள் தமிழுக்குப் பதிலாக கற்பிக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு. தமிழகத்தில் ஏறத்தாழ 40 பள்ளிகள் இருக்கலாம்.

ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகள்:

ஆங்கிலோ – இந்தியப் பிரிவினர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள் இவை. பழைய கணக்குப்படி இவற்றின் எண்ணிக்கை 41. இன்று இவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கவும் வாய்ப்புண்டு.

நடுவரசு பாடத்திட்டப் பள்ளிகள்:


மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடிய நடுவரசுப் பணியாளர்களின் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பள்ளிகள் இவை. இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே வகையான பாடத்திட்டம். தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளும் இப்பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. பொதுவாக இவ்வகைப் பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கிலமாகவே இருக்கும். தமிழகத்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக பயிலுவதற்கான வாய்ப்பு இப்பள்ளிகளில் உள்ளது.

நர்சரி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள்:

தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பரவியுள்ள பள்ளிகள் இவை. ஏறத்தாழ 4000 பள்ளிகள் வரை இவை இருக்கலாம். மழலைக் கல்வி முதல் பள்ளி இறுதி(பத்தாம்) வகுப்பு வரைக் கற்பிக்கப்படுகிறது. மேல்நிலைக் கல்வி இவ்வகைப் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றியே வழங்கப்படுகிறது. விதிவிலக்காக சில பள்ளிகள் நடுவரசின் பாடத்திட்டத்தினையும் பின்பற்றலாம். இவ்வகைப் பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கிலம் மட்டுமே. மாணவர்களிடமிருந்து பெறப்படும் கல்விக் கட்டணங்கள், நன்கொடைகள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் நிதியிலிருந்து பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. தனியாரால் நிர்வகிக்கப்படும் இவ்வகைப் பள்ளிகளுக்கு அரசின் நிதி உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

பிறவகை பள்ளிகள்:

பன்னாட்டுப் பள்ளிகள், உறைவிடப் பள்ளிகள், மாண்டிசோரிப் பள்ளிகள் என வேறு பல பாடத்திட்டங்களுடன் பற்பல பள்ளிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன.

ஒரே வயதில் பள்ளியில் நுழையும் குழந்தைகள், வேறுபாடான கல்வி முறைகளினால் ஏற்ற தாழ்வானக் கல்வியை பெறும் சூழலில் தள்ளப்படுகின்றனர். குடும்பத்தின் பொருளாதார வசதி, வாழ்க்கைச் சூழல், பாலினம், போன்ற பல்வேறு காரணிகள் குழந்தையின் கல்வி முறையை தீர்மானிக்கும் போக்கை காணமுடிகிறது. கிராமப் புறத்தில் வாழும் ஏழையான, படிக்காத, ஒடுக்கப்பட்ட சாதியைக் சார்ந்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி ஒரு விதமாகவும், வசதிபடைத்த மேற்சாதியைச் சார்ந்த நகர்புறத்தில் வாழும் படித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி வேறு விதமாகவும் இருக்கிறது.

பிறப்பால் குழந்தைகளில் ஏற்றதாழ்வு இல்லை. ஆனால் அவர்கள் பயிலும் பள்ளிகளில் ஏற்றதாழ்வு உண்டு. பள்ளிகள் பின்பற்றும் கற்றல் கற்பித்தல் முறைகளிலும் ஏற்றதாழ்வு பல உண்டு. இத்தகைய ஏற்றதாழ்வுதான் சமூக நீதியா? ஏற்றதாழ்வற்ற கல்விமுறை நடைமுறையில் சாத்தியம் தானா?

நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் நமது தலைவர்கள் காலனிய ஆட்சியில் நம்மீது திணிக்கப்பட்ட கல்வி முறையையே செயலுக்குரியதாக கொண்டுள்ளனர். கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாறுதல்கள் அல்லது மாற்றங்கள் அனைத்தும் பெயர் மாற்றங்கள் என்ற நிலையிலேயே அமைந்திருத்தல் தெளிவு.

1950 - ல் செயலுக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 45வது பிரிவில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பத்தாண்டுகளுக்குள் கல்வி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. அறிவொளி தீபம் ஏற்றினோம்! வளர்கல்வி இயக்கம் கண்டோம்!! ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இலக்கை எய்தினோம் இல்லை. இப்போது ′அனைவருக்கும் கல்வி′ என புதுத்திட்டம் வரைந்து செயல்படுத்த முனைந்துள்ளோம். ′ஆண்டிகள் மடம் கட்டிய கதை′தான் நினைவுக்கு வருகிறது.

″மனிதநேயமுள்ள ஓர் உயர்ந்த சமுதாயத்தை படைக்க கல்வியில் சம வாய்ப்பை மக்கள் அனைவரும் பெறவேண்டியது மிக அவசியம். தனியார் நடத்தும் நிறுவனங்களில் செல்வந்தர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென கருதிக் கொள்கிறார்கள். இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வகைப் பிரச்சினைகளினூடே கல்வியில் சம வாய்ப்பு என்பது முக்கியமான ஒன்றாகும்″ என டாக்டர் கோத்தாரி கல்விக் குழு கூறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை(1986) நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அடிப்படையில் பொதுவான கல்வி ஏற்பாடு(National core Curriculam) இருத்தலை வலியுறுத்துயுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய கல்விமற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(NCERT) வெளியிட்டுள்ள தேசிய கலைத்திட்ட வரையறை(National Curriculam Frame Work) - 2005 அதன் இலக்கு பொதுப் பள்ளி முறை(Common School System)யை எட்டுவது என்று கூறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆச்சார்ய இராமமூர்த்தி குழு (1990) கோத்தாரிக் குழுவின் பரிந்துரைகளை ஒரு மனதாக ஏற்று தனது பரிந்துரைகளில் பொதுப்பள்ளி முறையை செயல்படுத்தக் கோரியுள்ளது. பாடச் சுமையை குறைப்பது குறித்து பரிந்துரைப்பதற்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் யசுபால் குழு தனது அறிக்கையில்(1993) நடுவரசு நடத்தும் கேந்திர வித்யாலாயா, நவோதயா பள்ளிகள் தவிர்த்த ஏனைய பள்ளிகள் அனைத்திலும் மாநில அரசின் பாடத்திட்டம் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

ஒரே வகையான கல்விமுறை, பாடத்திட்டம், பயிற்றும் முறை, வசிக்கும் பகுதியின் அருகிலே பள்ளி அமைந்திருந்தல், அப்பகுதி குழந்தைகள் அனைவரும் அந்தப் பள்ளியிலேயே பயிலுதல், தாய்மொழியிலேயே கல்வி வழங்குதல், கல்விக்கான செலவுகளை அரசே ஏற்றுச் செயல்படுத்துதல் இப்படியான அமைப்பே பொதுப்பள்ளி கல்வி முறையாக அமையும். அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கல்விக் குழுக்களும் கல்விக் கொள்கைகளும் இத்தகையதொரு பொதுவான கல்வி ஏற்பாட்டையே வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் இவ்வகையான கல்வி ஏற்பாட்டினை முடிவு செய்யவே தொடர்ந்து குரலெழுப்புகின்றன. பொதுப்பள்ளி கல்வி முறையே தமிழகத்தில் சமச்சீர் கல்வி என வழங்கப்படுகிறது.

சமச்சீர் கல்வி என்பது பள்ளிக் கட்டிடம், பாடத்திட்டம், புத்தகங்கள், எழுதுபொருள்கள், ஆசிரியர்கள் என்ற வெறும் முன்னேற்பாடுகளுக்கும் மேலானதாகும். இக்கல்விமுறை என்பது சமமான கல்வி, கல்வி தொடர்பான சம வாய்ப்புகள் ஆகியவற்றை அரசிடமிருந்து பெறுவதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமையுண்டு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். பன்னாட்டு விசைகள், சாதி, இன, மதவாத விசைகள், தனியார் பள்ளி நிறுவனங்கள் போன்றவைகள் தீர்மானிக்காத ஒரு கல்விமுறையைக் கொண்டுவரும் நோக்கமுடையதாகும். படிப்பதற்கும் எழுதுவதற்குமான அறிவு என்பதாக மட்டுமல்லாமல் திறன் வளர்பதற்கான ஆற்றலை மேம்படுத்துவதற்கு உதவுகின்ற செயல் விளைவை உருவாக்குகின்ற கல்விமுறையாக அமையும். இம்முறையில் நல்ல சிறப்பான கல்வி பெறுவது என்பது செல்வத்தையும் வர்க்கத்தையும் சார்ந்ததாக அல்லாமல் திறமை சார்ந்ததாகவே இருக்கும்.

தற்போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது போன்று தாளிகைகளிலும் மேடைகளிலும் அதிகமாக பேசப்படுகிறது. குறைந்த பட்சக் கற்றல் இலக்குடைய கல்விமுறை, கற்றலில் இனிமை, செயல் வழிக் கல்வி, தானே கற்றல், படிப்பும் இனிக்கும் இப்படி பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும் கற்றல் கற்பித்தல் வழிமுறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளதாக பேசப்படுகின்றன.

இதுபோன்ற ஒரு கற்றல் கற்பித்தல் நடைமுறையாகவே ′சமச்சீர் கல்வி′ முறையும் பார்க்கப்படுகின்றதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளும் இந்த ஐயத்தை உறுதி செய்வதாகவே அமைகிறது. நடந்து முடிந்த பள்ளி இறுதி(பத்தாம்) வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அனைத்தும் 500 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு வழங்கப்பட்ட நடைமுறையினால் இது விளங்கும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துதலின் முதல் முயற்சியாம் இது.

′சமச்சீர் கல்வி′ என்ற பெயரில் நடைமுறையில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்களை ஒன்றிணைத்து ஒரே வாரியமாக மாற்றி பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மொத்தம் 500 எனக் கணக்கிட்டுவிட்டால் அதுதான் சமச்சீர் கல்வி என்ற கருத்தோட்டம் உருவாகி வருவது கண்கூடு. இது நடைமுறையில் உள்ள கல்விமுறையை விட மிகவும் ஆபத்தானது.


(இக்கட்டுரை ஆகத்து-2008 தமிழினி இதழில் வெளிவந்துள்ளது)

0 மறுமொழிகள்: