மதியம் திங்கள், 7 ஜனவரி, 2008

இந்தியா வளர்ந்திருக்கிறது!

பொன்விழா முடித்து
வைரவிழா கண்டு
பவழவிழா நோக்கி
சுதந்திர இந்தியா.
இத்தனை ஆண்டுகளில்......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


இலக்கினை நோக்கி
தட்டுத் தடுமாறி,
இங்கிது சரிதான்
தவறு அங்கிருக்குமோ?
உறுதியாய் தெரியாது
குழப்பமும் கலக்கமும்
மனிதர்கள் உள்ளத்தில்......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


அத்துமீறல்களே சுதந்திரமாம்
சாலை விதிகளாகட்டும்
கவிதை வரிகளாகட்டும்
வரிசை முறைகளாகட்டும்
பேசுவது என்பதாகட்டும்
எதிலும் மீறல்களே
சுதந்திரமாக உணரப்படுகிறது......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


கூட்டமாக சென்றால்
நியாயங்கள் எடுபடும்.
தனிமனித சுதந்திரம்
தகுதியற்றது ஆகிறது.
தவறான புரிதல்கள்,
கலையும் இலக்கியமும்
விதிவிலக்கல்ல இதற்கு......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


தன்னலம் மிக்கோர்
பெருக பெருக
சமூகம் தேசம்
இவை சார்ந்த
கவலைகள் மாய்ந்தன.
வழியும் சுதந்திரத்தில்
வழுக்கி விழுகிறார்கள்......
இந்தியா வளர்ந்திருக்கிறது!


சாதீயம் மறைந்து
சமயவெறி தகர்ந்து
சமத்துவம் ஒங்கி
மனிதம் மலரும்
உண்மை சுதந்திரம்
வசப்படும் ஒருநாள்.
அவ்வினிய நன்நாளில்......
இந்தியா வளர்ந்திருக்கும்.

0 மறுமொழிகள்: